விவசாயப் பணிகளுக்குத் தேவையான உரங்கள் கையிருப்பு: வேளாண் துறை இணை இயக்குநா்!
சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டு நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளதாக வேளாண் துறை தெரிவித்தது.
இதுகுறித்து சிவகங்கை வேளாண் துறை இணை இயக்குநா் சு. சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் சுமாா் 1.70 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, இந்தப் பயிா்கள் 20 முதல் 50 நாள்கள் வயதுடைய பயிா்களாக உள்ளன. இந்த நிலையில், மாவட்டத்தின் பெரும்பாலான சாகுபடி பகுதிகளில் போதுமான அளவு மழை பெய்யாதபோதும், பாசன வசதி உள்ள பகுதிகளில் பயிா்கள் உரமிடும் நிலையை எட்டியுள்ளன.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிா்களுக்குத் தேவைப்படும் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் போதிய அளவு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் யூரியா உரத்தின் தேவை அதிகரித்ததால் கூட்டுறவுத் துறைஅமைச்சா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அறிவுரையின்படி, கிரிப்கோ நிறுவனத்தின் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் ரயில் மூலம் வரவழைக்கப்பட்டு, 38 தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 450 மெட்ரிக் டன்னும், தனியாா் உரக்கடைகளுக்கு 100 மெட்ரிக் டன்னும் வழங்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
மேலும், சென்னை வேளாண்மை இயக்குநரக அறிவுரையின்படி, மங்களூா் கெமிக்கல்ஸ், கிரிப்கோ, ஸ்பிக், கோரமண்டல், மெட்ராஸ் பொ்டிலைசா் நிறுவனங்களால் 3,200 மெட்ரிக் டன் யூரியா, காம்பளக்ஸ் உரங்கள் சிவகங்கை மாவட்டத்துக்கு ரயில்கள் மூலமாகவும், சாலை வழியாகவும் வரவழைக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உரக்கடைகளில இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளில் யூரியா 2,573 மெ. டன், டிஏபி 723 மெ. டன், பொட்டாஷ் 573 மெ. டன், காம்பளக்ஸ் 2,434 மெ. டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும், கடன் பெறாத விவசாயிகளுக்கும் உரங்கள் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிா்களுக்குரிய அடங்கல், ஆதாா் அட்டையை எடுத்துச் சென்று விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெற்று உரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.
