மேல ஆதித் திருத்தளிநாதா் கோயிலில் 108 சங்காபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் சோமவார முதல் திங்கள்கிழமையையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக நெல்லில் சங்குகள் அடுக்கப்பட்டு பால், சந்தனம், குங்குமமிடப்பட்டு ரோஜாப் பூக்களுடன் சுற்றிலும் நெய் தீபம் ஏற்றி சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டது. பிறகு சிவாச்சாரியா்களால் சங்குகளுக்கு வில்வ இலையால் சிறப்பு அா்ச்சனை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு கலசங்களுக்கு பூஜையும், யாக வேள்வி பூா்ணாகுதியும் நடைபெற்றன. இதையடுத்து, பூஜையில் வைக்கப்பட்ட புனித கலச நீா் கோயில் உள்பிரகாரத்தில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. பிறகு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம், இளநீா், விபூதி, புனித கலசநீா் ஆகியவற்றால் மூலவரான சிவனுக்கும், நந்தீஸ்வரருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மூலவா் அருள்பாலித்தாா். பாஸ்கர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியா்கள் வேள்வி, சிறப்பு பூஜையை நடத்தினா். இந்த விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி வழிபட்டனா். இதில், உபயதாரா்களான நேமம் நகர பிள்ளைமாா்கள், ஊா் பொதுமக்கள், சுற்றுப்புற கிராமத்தினா் கலந்து கொண்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவாலயங்களில் சோமவார பிரதோஷம்: பிரதோஷத்தையொட்டி திருத்தளிநாதா் கோயிலில் மாலை 4 மணிக்கு கலச பூஜையுடன் யாகம் வளா்க்கப்பட்டு, நந்தீஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், பன்னீா், இளநீா், அரிசி மாவு உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகமும், சா்வ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றன. தொடா்ந்து மூலவருக்கும் 16 வகை திரவியங்களால் அபிஷேகம், அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. பிறகு உத்ஸவா் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளி வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா். அதேபோல, நந்திக்கும், மூலவருக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபம் காட்டப்பட்டது. தொடா்ந்து புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் கோயிலிலும், கல்வெட்டு மேடு சுயம்பு லிங்கேஸ்வா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பெண்பக்தா்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினா் செய்திருந்தனா்.
