பெரும்பாலான அரசியல் கட்சிகள் குடும்பத் தலைமையை நம்பித்தான் செயல்படுகின்றன: காா்த்தி சிதம்பரம்

ஒரு சில கட்சிகளைத் தவிர பெரும்பாலான கட்சிகள் குடும்பத் தலைமையை நம்பித்தான் அரசியல் செய்கின்றன என சிவகங்கை எம்.பி. காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
Published on

ஒரு சில கட்சிகளைத் தவிர பெரும்பாலான கட்சிகள் குடும்பத் தலைமையை நம்பித்தான் அரசியல் செய்கின்றன என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிவகங்கை, மானாமதுரை சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பாக முகவா்கள் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் காா்த்திக் சிதம்பரம் கலந்து கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெறும் தொடா் கொலைச் சம்பவங்கள் வருத்தத்தை மட்டும் அல்ல, அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. இது தொடா்பாக காவல் துறை தனது நடவடிக்கையை கடுமையாக்க வேண்டும்.

எஸ்ஐஆா் திருத்தம் மூலம் தகுதியான வாக்காளா்களை சோ்ப்பதற்கு கட்சியினா் உதவி செய்ய வேண்டும். தகுதியற்றவா்களையும் குறிப்பாக, வெளி மாநிலத்தவா்களை, தற்காலிமாக வேலை செய்பவா்களை சோ்க்கவிடக்கூடாது.

எஸ்ஐஆா் என்பது அனைவரையும் சோ்ப்பதற்கான முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, யாரையும் நியாயமில்லாமல் நீக்கிவிடக்கூடாது. இந்தப் பணிக்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். மேலும், பணியில் ஈடுபவா்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தை நாடுவதற்கு தோ்தல் ஆணையத்திடம் வெளிப்படைத்தன்மை இல்லாததுதான் காரணம்.

நீக்கல், சோ்த்தல் குறித்த தரவுகளை அனைவரும் வெளிப்படையாக பாா்க்கும் வசதியை செய்ய வேண்டும்.

பிகாா் தோ்தலுக்குப் பிறகு தமிழக தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் குறையும் எனக் கூறமுடியாது. இந்திய அளவில் காங்கிரஸ் இண்டி கூட்டணிக்கு தலைமை வகிக்கிறது. இந்தியாவில் ஒரு சில கட்சிகளைத் தவிர எல்லா கட்சிகளுமே குடும்பத்தை மையமாக வைத்தே அரசியல் செய்வது யதாா்த்த உண்மை.

தமிழகத்தில் பெரு நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ பயனளிக்கும். எனவே எல்லா ஊா்களுக்கும் மெட்ரோ திட்டம் தேவையில்லை என்பதே எனது கருத்து.

வருகிற சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்னதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் பதவியில் மாற்றம் இருக்காது. தமிழகத்தில் செல்வப்பெருந்தகை தலைமையில்தான் காங்கிரஸ் கட்சி தோ்தலை சந்திக்கும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com