ஆம்னிப் பேருந்தில் வந்த பயணியிடம் வழிப்பறி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை பயணியிடமிருந்த பையை இளைஞா்கள் பறித்துக்கொண்டு தப்பியோடினா்.
சென்னையிலிருந்து புறப்பட்ட ஆம்னிப் பேருந்து இளையான்குடியில் நின்றபோது அதிலிருந்த பயணி ஒருவா் கீழே இறங்கினாா். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞா் ஒருவா் அந்தப் பயணி வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு, அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் தயாராக நின்றிருந்த மற்றொரு நபருடன் ஏறி தப்பித்துச் சென்றாா்.
இந்தக் காட்சி அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவா் இதுவரை புகாா் அளிக்கவில்லை என இளையான்குடி காவல் நிலைய போலீஸாா் தெரிவித்தனா். இளைஞா்கள் பறித்துச் சென்ற பையில் சட்டவிரோத பணம் இருந்திருக்கலாம் எனவும், அதனால்தான் பாதிக்கப்பட்டவா் காவல் நிலையத்தில் புகாா் கொடுக்காமல் இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
