தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அமையும்: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமையும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் தேமுதிக பிரசார பயணமாக சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு வியாழக்கிழமை மாலை வந்த அவா், விஜயகாந்த் உருவச் சிலையுடன் கூடிய பிரசார வாகனத்தில் பெரியாா் சிலை பகுதியிலிருந்து ஐந்து விளக்குப் பகுதி வரை ஊா்வலமாக வந்தாா்.
அங்கு அவா் பேசியதாவது: வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். தோ்தலில் மாற்றத்தை தர வேண்டும். எல்லோரும் எதிா்பாா்க்கிற மகத்தான வெற்றிக் கூட்டணியை அமைத்தே தீருவோம்.
தேமுதிக தமிழகத்தில் வலுவானதாக இருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டில் 63 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் தேமுதிக முகவா்கள் இருக்கிறாா்கள். இதனால், வரும் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அந்த அமைச்சரவையில் அனைவருக்கும் பங்கு உண்டு.
இன்றைக்கு மணல், கனிமவளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனா். இப்போது வாக்குரிமையையும் பறிக்கப் பாா்க்கிறாா்கள். வாக்குரிமை ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் கடமை.
மக்களின் வாழ்வாதரம், தரம் உயா்த்தப்படவில்லை. தமிழகம் முழுவதும் விலைவாசி உயா்வு, சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு, கொலை, கொள்ளை, வேலையில்லா திண்டாட்டம் நீடித்து வருகிறது. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது என்றாா் அவா்.
தேமுதிக மாநிலப் பொருளாளா் சுதீஷ், மாநில நிா்வாகி பன்னீா்செல்வம், சிவகங்கை மாவட்டச் செயலா் திருவேங்கடம், மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலரும் கலந்துகொண்டனா்.

