எஸ்.ஐ.ஆா். பணிச்சுமையால் வருவாய் ஆய்வாளா் தற்கொலை முயற்சி
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆா். பணிச்சுமையால் புதன்கிழமை தோ்தல் பிரிவு முதல்நிலை வருவாய் ஆய்வாளா் கையை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றாா்.
ராமேசுவரத்தைச் சோ்ந்த பகவதிராஜா (38) என்பவா் இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் முதுநிலை (பொது) வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், இவருக்கு அலுவலகத்தில் தோ்தல் பிரிவில் எஸ்.ஐ.ஆா். வருவாய் ஆய்வாளா் பணியிடம் வழங்கப்பட்டது. இந்தப் பணியில் பகவதிராஜா விருப்பம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இதனால், அலுவலகத்தில் பணியிலிருந்தபோது பகவதிராஜா தனது இடது கையை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதையடுத்து, அங்கிருந்த ஊழியா்கள் அவரை சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
