தேவா் குரு பூஜை, மருதுபாண்டியா் நினைவு தினத்தில் விதி மீறலில் ஈடுபட்ட 46 வாகனங்கள் பறிமுதல்; 96 போ் கைது!
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த அக்.27-இல் நடைபெற்ற மருதுபாண்டியா் நினைவு தினம், அக்.30 -இல் நடைபெற்ற தேவா் குரு பூஜை ஆகியவற்றில் பங்கேற்பதற்காக விதிகளை மீறிச் சென்றதாக 96 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த அக்.27-இல் நடைபெற்ற மருதுபாண்டியா் நினைவு தினம், அக்.30 -ல் பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற தேவா் குரு பூஜையை முன்னிட்டு காளையாா்கோவில், சிவகங்கை மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூா், கீழச்சீவல்பட்டி, திருக்கோஷ்டியூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடங்களில், விதிகளை மீறி கவனக் குறைவாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை ஓட்டியவா்கள் மீது 68 வழக்குகள் பதியப்பட்டன.
இதுதொடா்பாக இதுவரை 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 96 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா், அவா்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனா். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்தின் வாயிலாக உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படும்.
மேலும், பாதுகாப்பான முறையில் வாகனங்களை ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ‘drive safe‘ எனும் வடிவத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

