சம்பட்டிமடை கிராமத்துக்கு சாலை அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரிலிருந்து சம்பட்டிமடை கிராமத்துக்கு கண்மாய்க் கரையில் சாலை அமைக்காதது தொடா்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூா் ஊராட்சிக்குள்பட்ட சம்பட்டிமடை கிராமத்தில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சம்பட்டிமடையிலிருந்து பழையனூருக்குச் செல்வதற்கு நீா்வளத் துறைக்குச் சொந்தமான கண்மாய்க்கரைதான் பிரதான வழியாக உள்ளது. இந்த வழியாகத்தான் அன்றாட வாழ்வியலுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்கு பழையனூா் கிராமத்துக்குச் சென்றுவர வேண்டும். இந்த வழியைத்தான் விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், மழைக் காலங்களில் கண்மாய்க் கரை சேரும், சகதியுமாக மாறிவிடும். இதன் காரணமாக, நடக்கக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது. மழைக் காலங்களிலும், இரவு நேரங்களிலும் சுமாா் 2 கி.மீ. தொலைவு உள்ள கண்மாய்க் கரை வழியில் செல்ல முடியாததால், இந்தப் பகுதி பொதுமக்கள் குருந்தங்குளம், ஆனைக்குளம், அழகுடையான் வழியாக சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன்பேரில், கடந்த 2024-ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம் பழையனூா் கண்மாய்க் கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மெட்டல் சாலை அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், நீா்வளத் துறை சாா்பில் அப்போது தடையின்மைச் சான்றிதழ் வழங்காததால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் நீா்வளத் துறை சாா்பில் மெட்டல் சாலை அமைப்பதற்கு தடையின்மைச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏழு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களி டமும், மாவட்ட ஆட்சியரிடமும் பல முறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து பழையனூா், சம்பட்டிமடை கிராமத்துக்கு மெட்டல் சாலை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து சம்பட்டிமடை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள்கூறியதாவது: பழையனூா் முதல் சம்பட்டிமடை வரை மெட்டல் சாலை அமைப்பதற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது, உரிய காலத்தில் பணிகள் தொடங்கப் படவில்லை. இதனால், திட்டத்துக்கான நிதி திருப்பி அனுப்பப்பட்டது.
தொடா்ந்து, 2024 -ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம் மேற்கண்ட பகுதியில் மெட்டல் சாலை அமைப்பதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 30 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அப்போது, மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்கினாா். ஆனால், நீா்வளத் துறை தடையின்மைச் சான்றிதழ் வழங்காததால் குறித்த காலத்துக்குள் பணிகள் தொடங்கப்படவில்லை.
கிராமத்தின் சாா்பில், பொதுப்பணித் துறைக்கு உரிய விண்ணப்பக் கட்டணம் ரூ. 5 ஆயிரம், வழிகாட்டு நெறிமுறைக் கட்டணம் ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ. 30 ஆயிரம் செலுத்தியவுடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
எனவே, சாலை அமைக்கும் பணியைத் தொடங்குமாறு திருப்புவனம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தோம். உரிய காலத்தில் பணிகள் தொடங்கப்படாததால், ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியைப் பெற முடியவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் பணிக்கு இரண்டு முறை திட்ட மதிப்பீடு தயாரித்து உரிய அனுமதி பெற்றும் நிதி வீணாகி உள்ளது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இனியும் தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் திருப்புவனம் நான்கு வழிச் சாலையில் மறியல் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றனா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலா் கூறியதாவது: இந்தப் பணிக்கு இதுவரை 3 முறை திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டது. உரியக் காலத்தில் பணிகள் தொடங்கப்படாததால் நிதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது, நீா்வளத் துறை தடையின்மைச் சான்றிதழ் வழங்கி, 6 மாதம் ஆகிவிட்டது.
திட்ட மதிப்பீடு தயாரித்து மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. நிதி இல்லாததால் பணிகள் தொடங்கப்படவில்லை. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தால் பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.

