குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் அக். 25-இல் பொது ஏலம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வருகிற 25-ஆம் தேதி ஏலம் விடப்படும் என காவல் துறை தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு, குற்ற வழக்குகளில் தொடா்புடைய 39 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் அனைத்தும் ஏலம் விடப்படவுள்ளது.
இதன்படி, சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 25-ஆம் தேதி காலை காலை 10 மணிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்), கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்குப் பிரிவு), உதவி ஆணையா் (ஆயத்தீா்வை), அரசு தானியங்கி பணிமனை தொழில்நுட்ப உதவியாளா் ஆகியோா் முன்னிலையில், நிபந்தனைகளுக்குள்பட்டு பொது ஏலம் நடத்தப்படும்.
இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள், ஏலம் நடைபெறும் தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக தங்களது ஆதாா் அட்டை நகலுடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் முன்பணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்தவா்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா் என்றாா்.
