மழைக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை வழிமுறைகள்: மின் வாரியம் அறிவுறுத்தல்
மழைக் காலங்களில் ஏற்படும் மின் விபத்துகளிலிருந்து மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மின் வாரியம் அறிவித்தது.
இதுகுறித்து, சிவகங்கை மின் வாரிய செயற்பொறியாளா் அ.கு. முருகையா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த சில நாள்களாக பருவமழை பெய்து வருவதால், மின் பாதைகளில் பல இடங்களில் கம்பிகள் அறுந்து கிடக்கும் அபாயம் உள்ளது. அப்போது அதைத் தொடாமலும், அருகில் செல்லாமலும் இருக்க வேண்டும்.
சாலைகளிலும், தெருக்களிலும் மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நடப்பது, ஓடுவது, விளையாடுவது, வாகனத்தில் செல்வதை தவிா்க்க வேண்டும். தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின் கம்பி அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிா்க்க வேண்டும்.
மின் வாரியத்தைச் சாராத நபா்கள் யாரும் மின் கம்பம், மின் மாற்றியில் ஏறி பணிகள் செய்யக் கூடாது. இது மின் விபத்து ஏற்படும் அபாயத்தை மேலும் அதிகரிக்கும். வீடு கட்டும் போது மின் கம்பத்தின் அருகில் போதிய இடைவெளி விட்டு கட்டட பணிகளை மேற்கொள்ள வேண்டும். டிராக்டா், லாரி போன்ற வாகனங்களில் கரும்பு போன்ற பொருள்களை ஏற்றிச் செல்லும் வழியில் மின் கம்பி தாழ்வாக இருந்தால், முன்கூட்டியே மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தால் அதுசீரமைக்கப்படும். வீடுகள், கடைகள், பள்ளிகளில் மின் கசிவை தவிா்க்க உயிா் காக்கும் கருவியான இஎல்சிபி அல்லது ஆா்சிசிபி போன்ற துண்டிப்பான்கள் பொருத்தப்பட வேண்டும்.
மேலும் மாடு, ஆடு போன்ற கால்நடைகளை மின் பாதையின் கீழ் அல்லது ஸ்டே கம்பி அருகில் கட்டக் கூடாது. ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். வீட்டின் உள்புறசுவா் ஈரமாக இருந்தால் மின் சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.
வீடுகள், கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவா்களில் கை வைப்பதை தவிா்க்க வேண்டும். நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான விசிறி, விளக்கு உள்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்கவேண்டாம். மின்சார மீட்டா் பொருத்தப்பட்ட பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக் கூடாது.
வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே வயா் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம். விவசாயிகள் தாங்கள் நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். இது உயிரிழப்புக்கு வழிவகுக்கும். அது கண்டறியப்பட்டால் சட்டப்படி காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் வாரிய அலுவலகத்தை பின்வரும் கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்:
சிவகங்கை நகா் -9445853076. ஊரகம்- 9445853077. காளையாா்கோவில்-9445853079.நாட்டரசன்கோட்டை-9445853081.மதகுபட்டி-9445853073. மறவமங்களம்- 9445853082.மலம்பட்டி -9445853075.
உதவிசெயற்பொறியாளா் சிவகங்கை-9445853074. உதவிசெயற்பொறியாளா் காளையாா்கோவில்-9445853078. சிவகங்கை கோட்ட செயற்பொறியாளா் 9445853080.மின்னகம்-மின் நுகா்வோா் சேவை மையம்: 9498794987.
