எதிா்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் மீண்டும் திமுக ஆட்சிதான்! - ஓ. பன்னீா்செல்வம்
எதிா்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வர திமுகவுக்கு வாய்ப்புள்ளது என்று முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகம் மட்டுமல்ல இந்திய நாடு விடுதலை பெற வேண்டுமென பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டு உயிா் நீத்த மருதுபாண்டியா்களின் தியாகம் விலைமதிப்பற்றது. தமிழகத்தில் அனைத்து எதிா்க்கட்சிகளும் பிரிந்து கிடப்பதால், வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வர திமுகவுக்கு வாய்ப்புள்ளது.
கரூரில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து ஆறுதல் கூறிய தவெக தலைவா் விஜயின் செயலைப் பாராட்டுகிறேன். அவரது கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, எதிா்காலத்தில் எதுவும் நடக்கலாம். கட்சியின் நலன் கருதி நல்ல முடிவை எடுப்போம் என்றாா் அவா்.

