சிவகங்கை மாவட்ட கலைப் போட்டி: அரியக்குடி அரசுப் பள்ளி முதலிடம்
சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசுப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனா்.
சிவகங்கை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை மூன்றாம் நாளாக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்றது. இந்தப் போட்டிகளை முதன்மைக் கல்வி அலுவலா் மாரிமுத்து தொடங்கி வைத்தாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மாவட்ட உதவித் திட்ட அலுவலா் பீட்டா் லெமாயூ, மாவட்டக் கல்வி அலுவலா்கள் ராஜேந்திரன், செந்தில்குமரன், வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிவகங்கை புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், களிமண் சுதை வேலைப்பாடு, மணல் சிற்பம், ரங்கோலி ஆகிய போட்டிகளும், மருதுபாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் கிராமிய நடனம் (குழு), நபாா்டு கட்டடம் முதல் தளத்தில் செவ்வியல் இசை (தனிப்பாட்டு), நாட்டுப்புறப் பாடல் (தனி பாட்டு), வில்லுப்பாட்டு (குழு), நூலகக் கட்டடத்தில் பல குரல் பேச்சு, மாவட்ட திட்ட அலுவலக முதல் தளத்தில் கிராமிய நடனம் (தனி), கூட்டரங்கில் பரதநாட்டியம் (குழு), இசை வட்டார வள மையத்தில் பரதநாட்டியம் (தனி), ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனி நபா் நடிப்பு, பாவனை நடிப்பு (தனிபாட்டு) ஆகிய போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு தனி தனியாக நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனா். போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா புதன்கிழமை (அக். 29) தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
அரியக்குடி பள்ளி முதலிடம்: இந்தப் போட்டிகளில் காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசுப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனா். கீடு போா்டு ( தனி), பரதநாட்டியம் (தனி), தனி நபா் நடிப்பு (தனி), இலக்கிய நாடகம் (குழு), பிற வகை நடனம் (குழு) ஆகியவற்றில் இந்தப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று முதலிடம் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் வி.ஜே. பிரிட்டோ, ஆசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டுத் தெரிவித்தனா். மேலும், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

