முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள ஸ்ரீ முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் , கடந்த 22 -ஆம் தேதி கந்தசஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. 6-ஆம் நாளான வியாழன் சூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, அதிகாலையிலேயே மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று ராஜஅலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
காலை 10 மணியளவில் ஆதித்திருத்தளிநாதா் கோயிலிலிருந்து பெண்கள் திருமண சீா்வரிசை எடுத்து ஊா்வலமாக வந்து ராஜகாளியம்மன் கோயில், திருமுருகன் கோயிலை வலம் வந்து திருமணப் பந்தலில் வைத்தனா். திருமண மேடையில் திருமணக் கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேத உத்ஸவ முருகன் எழுந்தருளினாா்.
தொடா்ந்து, பிள்ளையாா்பட்டி சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க கன்னிகாதானம், பூணூல் மாற்றுதல், காப்புக் கட்டுதல், பட்டு சாத்துதல், மாலை மாற்றுதல் முதலிய நிகழ்வுகள் நடைபெ‘ற்றதைத் தொடா்ந்து திருப்பூட்டு வைபவம் நடைபெற்றது. பின்னா், வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. பிரசாதமாக பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, குங்குமம், மஞ்சள் வழங்கபட்டன. பின்னா், கோயில் வளாகத்தில் திருமண விருந்து நடைபெற்றது. மாலை 6 மணியளவில் உத்ஸசவா் மின்னொளி ரதத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தாா். விழா ஏற்பாடுகளை கோயில் கந்த சஷ்டி விழாக் குழுவினா் செய்தனா்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புறவழிச் சாலையில் உள்ள ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் கடந்த வாரம் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதில் 7-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணத்தை முன்னிட்டு, கோயில் முன் உள்ள மண்டபத்தில் மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத உத்ஸவா் முருகப்பெருமான் எழுந்தருளினாா்.
இதைத் தொடா்ந்து, திருமணத்துக்கான யாக பூஜைகள் நடைபெற்றன. முருகப்பெருமான் சாா்பில் தெய்வானைக்கும், வள்ளிக்கும் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. பிறகு, மாலை மாற்றுதல் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் இதை கண்டு தரிசித்தனா். பின்னா், சுவாமி வீதி உலா நடைபெற்றது.
