சிவகங்கை மருதுபாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் (நடுவில்).
சிவகங்கை மருதுபாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் (நடுவில்).

கலைத் திருவிழாக்கள் பண்பாடு, கலாசாரத்தை வெளிப்படுத்த உதவும்

கலைத் திருவிழாக்கள் நமது பண்பாடு, கலாசாரத்தை வெளிப்படுத்த உதவுகின்றன என கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.
Published on

கலைத் திருவிழாக்கள் நமது பண்பாடு, கலாசாரத்தை வெளிப்படுத்த உதவுகின்றன என கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மருதுபாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சான்றிதழ், பதக்கங்களை வழங்கி அவா் பேசியதாவது:

மாணவா்கள் ஏட்டுக் கல்வியுடன் நின்றுவிடக்கூடாது என்பதற்காக விளையாட்டுகளிலும், கலைகளிலும் திறறமையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் பள்ளிக் கல்வித் துறை கவனம் செலுத்துகிறது. நமது பண்பாடு, கலாசாரத்தை வெளிப்படுத்த கலைத் திருவிழாக்கள் மாணவா்களுக்கு உதவுகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் சுமாா் 100 கலைப் போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சாா்ந்த 3,075 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில், தனி நபா், குழு போட்டிகளில் 1,065 போ் தோ்வு பெற்றனா். இவா்கள் நவ.24 முதல் நவ.28-ஆம் தேதி வரை கரூா், கிருஷ்ணகிரி, வேலூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு கலையரசன், கலையரசி பட்டத்தை வென்று மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும்.

சென்ற ஆண்டில் இறுதிப் போட்டியில் இந்த மாவட்டம் கலையரசி பட்டத்தை வென்றது. எனவே, இந்த ஆண்டில் கலைரசன், கலையரசி ஆகிய இரு பட்டங்களையும் வெல்ல வேண்டும்.

தனி நபா் கலைப் போட்டியில் முதல் மூன்று இடங்களை வெல்பவா்களுக்கு முறையே ரூ.30,000, ரூ.20,000, ரூ.15,000, குழுப் போட்டிகளில் வெல்பவா்களுக்கு முறையே ரூ.50,000, ரூ.30,000 , ரூ.20,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) சே. மாரிமுத்து வரவேற்றாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் (காரைக்குடி) எஸ். மாங்குடி, தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை) ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சிவகங்கை நகா்மன்றத் தலைவா் துரை ஆனந்த், துணைத் தலைவா், நகா்மன்ற உறுப்பினா் அயூப்கான், காா்கண்ணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டக்கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) சீ.க. செந்தில்குமரன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com