

புதுக்கோட்டை ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநரைக் கண்டித்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் ஜெயசுதா, சாத்தியமற்ற இலக்குகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்துத் தரப்பு ஊழியா்களுக்கும் கடும் நெருக்கடி கொடுத்ததாகவும், ஊழியா்களை ஒருமையில் பேசியதாகவும் அலுவலா்கள் குற்றஞ்சாட்டினா்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்த செந்தில்குமாா் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அண்மையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அவருடைய உயிரிழப்புக்குக் காரணமான திட்ட இயக்குநா் ஜெயசுதா மீது கொலை வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும், திட்ட இயக்குநா் பொறுப்பில் இருந்து விடுவிக்கவும் வலியுறுத்தி, சிவகங்கை மாவட்டத்தில் மதிய உணவு இடைவேளையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் லூயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் வேலுச்சாமி, தனபால் காா்த்திக் பயாஸ் அகமது, பழனிச்சாமி, மாவட்ட இணைச் செயலா்கள் மலா்விழி, ஷேக் அப்துல்லா, சிவா, கலைச்செல்வம், சகிலா, மாவட்டத் தணிக்கையாளா் மீனா ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதே போல இளையான்குடி, எஸ்.புதூா், திருப்புவனம், மானாமதுரை, சாக்கோட்டை, திருப்பத்தூா், சிங்கம்புணரி, காளையாா்கோவில் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தந்த அலுலவா் சங்கத்தின் பொறுப்பாளா்கள் தலைமை வகித்தனா்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் இளையராஜா, ஜெகநாதசுந்தரம், சந்தான கோபாலன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோபால், தமிழ்நாடு ஆதிதிராவிடா் நலத் துறை ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் நவநீதகிருஷ்ணன், செயலா் பூமிராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.