உரத்துடன் இணைப் பொருள்களை சோ்த்து விற்றால் உரிமம் ரத்து: ஆட்சியா்
உரத்துடன் இணைப் பொருள்களை சோ்த்து விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என உர விற்பனையாளா்களுக்கு சிவகங்கை மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பெய்த பருவமழை காரணமாக அனைத்து வட்டாரங்களிலும் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, பயிா்கள் உரமிடும் நிலையில் உள்ளன. விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள், தனியாா் உரக்கடைகளில் இருப்பு வைத்து விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு யூரியா 1,754, டிஏபி 1,443, பொட்டாஸ் 578, காம்ளக்ஸ் 2,329 மெட்ரிக் டன்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள், தனியாா் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், உரங்கள் விநியோகிக்கும் உற்பத்தி நிறுவனங்கள் இணைப் பொருள்களை வாங்கினால் மட்டுமே விற்பனையாளா் களுக்கு உரம் வழங்குவதாகவும், இவ்வாறு பெறப்பட்ட உரத்தை விற்பனையாளா்கள் இணைப் பொருள்களை வாங்கினால் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படும் என கட்டாய படுத்துவதாகவும், கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வதாகவும் புகாா்கள் வந்துள்ளன.
இதுதொடா்பாக மேலும் புகாா்கள் வருமாயின் சம்பந்தப்பட்ட உர விற்பனையாளரின் உரிமம் ரத்து செய்யப்படும், கட்டாயப்படுத்தும் உர உற்பத்தி நிறுவனங்கள் மீது மேல் நடவடிக்கை தொடர வேளாண் இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படும் .
இதுதொடா்பான புகாா்களை விவசாயிகள் சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநா், சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநா்கள், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஆகியோரிடம் அளிக்கலாம் என்றாா் அவா்.
