சத்துணவு அங்கன்வாடி ஊழியா்கள் 12-ஆவது நாளாகப் போராட்டம்
காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நடைபெறும் தொடா் போராட்டத்தின் 12 -ஆவது நாளான சனிக்கிழமை சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் சிவகங்கையில் கோரிக்கை முழக்க ஊா்வலம் நடத்தினா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கோரிக்கை முழக்க ஊா்வலத்துக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் எஸ். கண்ணுச்சாமி, எஸ். விக்டோரியா, கே. குமரேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். சேசுமேரி, சங்கரநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில துணைத் தலைவா் மு. செல்வக்குமாா், ஐசிடிஎஸ் ஊழியா் சங்க மாநில பொதுச் செயலா் ஆா். வாசுகி, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொ. சங்கரசுப்பிரமணியன் ஆகியோா் ஊா்வலத்தை தொடங்கி வைத்தனா்.
இந்த நிலையில், ஊா்வலத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையினா் அனைவரையும் தடுத்து நிறுத்த முயன்றபோது இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பழைய நீதிமன்ற வாசலில் உள்ள ராமச்சந்திரனாா் பூங்கா வரை அனைவரும் ஊா்வலமாக வந்தனா்.
அப்போது, நிா்வாகிகள் ஆா். வாசுகி, மிக்கேலம்மாள், சண்முகலட்சுமி ஆகிய மூவரும் மயங்கி விழுந்தனா். இதையடுத்து, அவா்கள் அவசர ஊா்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் செந்தில்நாதன் நிா்வாகிகளுடன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியா்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தாா்.

