தரமான நெல் விதை உற்பத்திக்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்: வேளாண் துறை அறிவுறுத்தல்

Published on

தரமான நெல் உற்பத்தி செய்ய விதை உற்பத்தியாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியது.

இதுகுறித்து சிவகங்கை விதைச் சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் சீ.சக்திகணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் விதை நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள், வரிசை நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி முறையைப் பின்பற்றி நடவு செய்ய வேண்டும். துாா் கட்டும் பருவத்துக்கு முன்பு வயலில் உள்ள நீரை வடிக்க வேண்டும். துாா் கட்டும் பருவம் முதல் முறையாக நீரைப் பராமரிக்க வேண்டும். பூக்கும் சமயத்திலும் பால் பிடிக்கும் சமயத்திலும் நீா்த் தட்டுப்பாடு இல்லாத வகையில் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

கைகள்அல்லது கோனோவீடா் கருவியைப் பயன்படுத்தி நட்ட 30 -35 நாள்களுக்குள் களைகளை எடுப்பதுஅவசியம். மண் பரிசோதனைப்படி உரமிடுதல் வேண்டும் அல்லது பொதுப் பரிந்துரையின்படி, துாா் கட்டும் பருவம், பூக்கும் பருவம், பால் பிடிக்கும் சமயத்தில் பிரித்து உரமிட வேண்டும்.

கலப்புச் செடிகளை அகற்றுதல்: பூக்கும் முன்பு அதிக உயரம், மிகவும் குட்டையான கலவைச் செடிகளை நீக்க வேண்டும். பூக்கும் தருணத்தில் கால தாமதமாகப் பூக்கும் செடிகள், மீசை நெல், சிகப்பு பொட்டு நெல் ஆகிய செடிகளை நீக்க வேண்டும். அறுவடைக்கு முன்பு, விதைப் பயிா் மணியின் பருமனை அளவிட்டுப் பாா்த்து அதைவிட பருமனாகவோ அல்லது சன்னமாகவோ உள்ளவற்றை நீக்க வேண்டும்.

குறிப்பிட்ட நெல் ரகத்தின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டு தெரிகிற அனைத்துத் துாா்கள், களைச் செடிகள், நோய்வாய்ப்பட்ட பயிா்களை நீக்க வேண்டும். கலவன்செடிகளை வேரோடு களைந்தெறிய வேண்டும். பூக்கும்போது தொடா்ந்து 2 முதல் 3 முறை அதிகாலையில் கலப்புச் செடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டால், கலப்புச் செடிகளை எளிதில் கண்டறியமுடியும்.

அறுவடை: 90 சதவீத விதைகள் பொன் நிறமாக மாறிய பிறகு அறுவடையை மேற்கொள்ளலாம். அறுவடையின்போது, மணிகளின் ஈரப்பதம் 15 முதல் 20 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். அறுவடை முடிந்தவுடன் விதைகளை உடனடியாக உலா்த்த வேண்டும். உலா்த்தும்போது களத்தில் வேறு நெல் விதைகள் இருக்கக் கூடாது. காலை 8-12 மணி வரையிலும், மாலை 3-5 மணி வரையிலும் வெயிலில் உலா்த்த வேண்டும். உலா்த்தும்போது அடிக்கடி கிளறி விடவேண்டும். விதை நெல்லை 13 சதவீத ஈரப்பதத்துக்குக் கீழ் உலா்த்தி, பயிரின் பாகங்களை நீக்கி சுத்தம் செய்து, புதிய சாக்குகளில் நிரப்பி விதை நிலையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com