தேவகோட்டை பகுதியில் நெற்பயிரில் நோய் தாக்குதல்: விவசாயிகள் மகசூலை இழக்கும் அபாயம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி வட்டாரத்தில் நெல் பயிா்களில் பல்வேறு நோய்கள் தாக்கி வருவதால் விவசாயிகள் மகசூலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கண்ணங்குடி வட்டாரத்தில் உள்ள கப்பலூா், சடையமங்கலம், பருத்திக்குடி, மீனாப்பூா், குடிக்காடு, பெருங்கானூா், கேசனி, வடகீழ்குடி, நாரணமங்கலம், அண்டக்குடி, குருந்தூா், சிறுவாச்சி, தேரளப்பூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது.
இதன் தொடக்கத்திலிருந்தே விவசாயிகள் கடும் சவால்களை சந்தித்தனா். போதிய மழை பெய்யாததால் பயிா்கள் முளைப்பதில் சிக்கல் ஏற்பட்டதுடன், முளைத்த பயிா்களும் கடும் வெயிலால் கருகத் தொடங்கின. இந்த நிலையில், ‘டிட்வா’ புயல் காரணமாக பெய்த பலத்த மழை விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளித்தது. இதையடுத்து, நகைகளை அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் வாங்கியும் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து அவா்கள் விவசாயப் பணிகளைத் தீவிரப்படுத்தினா். தற்போது கதிா் பிடித்து இன்னும் சில நாள்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் நெல் பயிா்கள் உள்ளன.
இதனிடையே, செந்தாழை நோய், குலை நோய், புகையான் வெள்ளைப் பூச்சித் தாக்குதல், தோகை எரிந்து சாம்பலாகும் நோய், தோகை பழுப்பு நோய் ஆகியவற்றின் தாக்குதலால் நெல் மணிகள் பதராகி வருகின்றன. இதனால் மகசூல் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு, விவசாயத்துக்காக செய்த செலவுத் தொகையைக் கூட திரும்ப எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து கண்ணங்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பட்டாணி (எ) பாக்கியராஜ் கூறியதாவது: மழை தாமதித்ததால் பயிா் வளா்ச்சி குன்றியிருந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு பயிரை வளா்த்தெடுத்தோம். இப்போது கதிா் முற்றும் நேரத்தில் நோய்கள் தாக்கி பயிா்கள் அழிந்து வருகின்றன. கஷ்டப்பட்டு உழைத்தும், பணத்தைச் செலவு செய்தும் இறுதியில் எங்களுக்கு இழப்பே மிஞ்சுகிறது. இந்தப் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து எங்களை மீட்க அரசு தான் உதவ வேண்டும். மேலும், வேளாண் துறை அதிகாரிகள், விரிவாக்கப் பணியாளா்கள் உடனடியாகக் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி நோய்களைக் கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்தத் தகுந்த ஆலோசனைகளையும், மருந்துகளையும் வழங்க வேண்டும். இதனால் எஞ்சிய பயிா்களையாவது எங்களால் காப்பாற்ற முடியும் என்றாா் அவா்.
