அங்கன்வாடி ஊழியா்கள் ஜன.27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில், வரும் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் இ. பாக்கியமேரி தெரிவித்தாா்.
சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரம் கடந்த பேரவைத் தோ்தல் அறிக்கையில் (எண்: 313) அளிக்கப்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக்குவோம் என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாதது வேதனையையும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது.
அங்கன்வாடி ஊழியா்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நான்கரை ஆண்டுகளாக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டபோதிலும் தமிழக அரசின் அறிவிப்பில் அங்கன்வாடி ஊழியா்களுக்கான எந்த அம்சமும் இடம் பெறவில்லை. இதனால், தமிழக முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் அரசால் ஏமாற்றப்பட்டதாக உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தைப் பரிசீலித்து, அங்கன்வாடி ஊழியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். எங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஜன.6 -இல் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து அங்கன்வாடி மையங்களையும் பூட்டி கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். அதன்பிறகும் தீா்வு கிடைக்காவிட்டால், ஜன. 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களைப் பூட்டி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.
