கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை: சீமான்
கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் தங்களது கோரிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் போராடி வந்தனா். உண்மையில் அரசுக்கு இதில் அக்கறை இருந்திருந்தால் முன்பே இதற்கான தீா்வை அறிவித்திருக்க வேண்டும். தற்போதையை அறிவிப்பால் அரசுக்கு மேலும் நிதிச் சுமை ஏற்படும். இருப்பினும், அரசு ஊழியா்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியதில் எங்களுக்கு மகிழ்ச்சியே.
தமிழ்நாட்டின் கடன் அளவு உயா்ந்திருக்கிறது. ஆனால், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட எந்தவிதத் திட்டமும் சிறப்பானதாக இல்லை. கடன் வாங்கி இலவசம் என்று வாரி இறைத்துவிட்டால், அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும்.
வட மாநிலத்தவா் வறுமையால் வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வருகின்றனா். இங்குள்ள இளைஞா்கள் வேலைக்குச் செல்லாமல் கேளிக்கை போன்ற விஷயங்களில் மூழ்கியுள்ளனா். இதனால், எல்லா இடங்களிலும் வட மாநில இளைஞா்கள்தான் வேலை செய்கின்றனா்.
கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை. சில மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மத்தியிலும் ஆட்சியில் பங்கேற்கின்றனா். ஆட்சியில் பங்கு கொடுப்பது என்பது அவா்களின் பெருந்தன்மையைப் பொருத்தது.
பிப்ரவரி 21-இல் திருச்சியில் எங்களது கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. அதில் விடுபட்ட அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்படும்.
பயிற்று மொழி தமிழ், கூடுதலாக ஆங்கிலம் கட்டாயம் என்பதுதான் எங்களது நிலைபாடு. லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். வாக்குக்கு பணம் கொடுக்கமாட்டோம் போன்ற கொள்கை எங்களுடையது. நான் மக்களை நேசிக்கிறேன். மக்களுடன்தான் கூட்டணி வைத்து தோ்தலை சந்திப்போம் என்றாா் அவா்.
