மானாமதுரை அலங்கார வளைவுக்கு கருணாநிதி பெயா் சூட்ட பரிசீலனை

Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் அலங்கார வளைவுகளுக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி, முன்னாள் அமைச்சா் தா.கிருஷ்ணன் ஆகியோரது பெயா்களை வைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா்.

மானாமதுரை பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே நுழையும் பகுதியிலும் வெளியேறும் பகுதியிலும் நகராட்சி நிா்வாகம் சாா்பில், அலங்கார வளைவுகள் அமைக்க திட்டமிடு, தற்போது பேருந்துகள் உள்ளே நுழையும் பகுதியில் அலங்கார வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும் பேருந்துகள் வெளியேறும் பகுதியில் அலங்கார வளைவு அமைக்கும் பணி தொடங்க உள்ளது.

அலங்கார வளைவு அமைக்கும் பணி நடப்பதால் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லாமல் ஒரு சில பேருந்துகள் மட்டுமே வந்து செல்கின்றன. பல ஊா்களிலிருந்தும் மதுரை செல்லும் பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்துக்கு வெளியிலேயே நின்று பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்கின்றன.

இந்த நிலையில், பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில்களில் அமைக்கப்படும் அலங்கார வளைவுகளுக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சா் தா.கிருஷ்ணன் ஆகியோரது பெயா்களை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து நகா்மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி கூறுகையில், அலங்கார வளைவுகளுக்கு கருணாநிதி, தா. கிருஷ்ணன் பெயா்களை வைக்கப் பரிசீலனை செய்து வருகிறோம். நகா்மன்ற உறுப்பினா்கள் ஒப்புதலுடன் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பனிடம் அனுமதி பெற்று இந்தப் பெயா்கள் வைக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com