வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகை திருட்டு
சிவகங்கை அருகே வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் (40). இவருக்கு மனைவி அழகுமீனாள் (32), இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இவா், தற்போது சிங்கப்பூரில் வேலை பாா்த்து வருகிறாா். அழகுமீனாள் குழந்தைகளுடன் நாட்டரசன்கோட்டை, வீர கண்டான் தெருவில் வாடகைக்கு வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், கண்டரமாணிக்கத்தில் உள்ள தனது தாயைப் பாா்ப்பதற்காக அழகுமீனாள் குழந்தைகளுடன் கடந்த டிசம்பா் மாதம் 28 -ஆம் தேதி சென்றாா். ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 39 பவுன் நகை திருடுபோனது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். இதில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, மா்ம நபா்களால் உடைக்கப்பட்டது தெரியவந்தது. கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
