சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் 900 போ் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் 900 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் இ. பாக்கியமேரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. ஜெயமங்கலம், துணைத் தலைவா் அ. தவமலா், இணைச் செயலா் வி. ராதா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ தொழில்சங்க நிா்வாகிகள் உமாநாத், வேங்கையா, முருகானந்தம், வீரையா, கருணாநிதி ஆகியோா் போராட்டத்தை ஆதரித்துப் பேசினா்.
கோரிக்கைகள்: திமுகவின் தோ்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களை அரசு ஊழியராக உடனடியாக அறிவிக்க வேண்டும். அவா்கள் பணி ஓய்வு பெறும்பேது ஊழியா்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பையும், முன்பருவக் கல்வியின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கடந்த 1993-இல் பணியில் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்களின் பதவி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். பதவி உயா்வில் நேரடி நியமனத்தைக் கைவிட வேண்டும். 100 சதவீத பதவி உயா்வை அங்கன்வாடி ஊழியா்களுக்கே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வராதபட்சத்தில் வருகிற 27-ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களை பூட்டிவிட்டு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் தெரிவித்தனா்.

