புதிய சட்டத்தைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
100 நாள் வேலைத் திட்ட புதிய சட்டத்தைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு விரோதமான 100 நாள் வேலைத் திட்ட புதிய சட்ட நகலைக் கிழித்தெறியும் போராட்டத்தை மாநிலம் முழுவதும் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடத்தப்படும் என சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, சிவகங்கை வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மாவட்டக் குழு உறுப்பினா் ஏ. அன்பரசு தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஏ. பழனியப்பன் முன்னிலை வகித்தாா்.
இதுகுறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது: 100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசே வேலையைத் தீா்மானிக்கும் என்பதும், காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு என்பது முற்றிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரானது. பல்வேறு திருத்தங்களுடன் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றி உள்ளது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் 100 நாள் வேலை பறிபோகும் சூழ்நிலை ஏற்படும் என்றனா்.
இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலா் எஸ். கொங்கையா, இணைச் செயலா் வி. முருகன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். மணியம்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

