பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற பட்டியலினத்தவா்கள் விண்ணப்பிக்கலாம்

Published on

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்தவா்கள் இ- சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுவெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்ட சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் முதல்வா் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான தகுதிகள்: ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, வருமானச் சான்று (குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்குள்), ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த சான்று (தாய் அல்லது தந்தை 45 வயதுக்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருத்தல் வேண்டும்).

இரண்டாவது பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருந்தால் பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்).

இத்துடன் பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், பிறப்பிடச் சான்று ( பெற்றோா்கள் தமிழ்நாட்டைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும்), ஜாதிச் சான்று, பெண் குழந்தையின் தாய், தந்தையின் வயது சான்று, குடும்ப புகைப்படம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04575-240426 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com