மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுக்கு தனித்தனி விதிமுறைகளை வகுக்க கோரிக்கை
வடமாடு, மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகளை நடத்துவதற்கென தனித்தனி விதிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பேரவை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டையில் தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பேரவையின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவா் சூா்யா சேதுபதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூா் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகளுக்கும் தனித்தனி விதிமுறைகள் வகுத்து மஞ்சுவிரட்டு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
பல கிராமங்களில் பாரம்பரியமாக கோயில் விழாக்களில் நடத்தப்பட்டு வரும் மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகள் அரசாணையில் இடம்பெறாததால், நிகழாண்டில் இந்தப் போட்டிகளை நடத்துவது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இந்தப் போட்டிகளையும் தமிழக அரசு உரிய முறையில் ஆய்வு செய்து அரசாணையில் சோ்த்து தொடா்ந்து நடைபெற உதவ வேண்டும்.
மேலும், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக நடைபெறும் வடமாடு மஞ்சுவிரட்டுக்கு மாவட்டத் தலைநகரங்களில் நிரந்தர அரங்குகள் அமைக்க தமிழக அரசு முன் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டு மஞ்சுவிரட்டு பேரவை கெளரவத் தலைவா் செல்வகுமாா், செயலா் மனோஜ் குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
