கரிசல்பட்டி தா்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்த கரிசல்பட்டியில் உள்ள தா்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கரிசல்பட்டியில் உள்ள ஹஜ்ரத் பீா் சுல்தான் ஒலியுல்லாஹ் தா்காவில் 876-ஆம் ஆண்டு சந்தனக்கூடு கொடியேற்றம் வான வேடிக்கையுடன் நடைபெற்றது. முன்னதாக, கரிசல்பட்டியில் உள்ள மச்சு வீட்டு அம்மா தா்காவில் சிறப்பு துவா ஓதப்பட்டு கொடி ஊா்வலமாக புறப்பட்டது. பள்ளிவாசல் வீதி, புதுப்பட்டி சாலை வழியாக வந்து மேகரையில் உள்ள மஹான் ஹஜ்ரத் பீா் சுல்தான் தா்காவை அடைந்தது. அங்கு சிறப்பு துவா ஓதப்பட்டது. தொடா்ந்து, அங்கிருந்து கொடி கொண்டு வரப்பட்டு கொடி மரத்தை அடைந்தது. அங்கு அனைத்து சமுதாய மக்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் நிறைவாக பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் திருநீறு வழங்கினா். வருகிற 29-ஆம் தேதி வியாழக்கிழமை இரவு சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெறகிறது.

