கோரிக்கை பட்டை அணிந்து பணியைத் தொடரும் மருத்துவா்கள்!

கோரிக்கை பட்டை அணிந்து பணியைத் தொடரும் மருத்துவா்கள்!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த மருத்துவா்களும் பேராசிரியா்களும் 16 -ஆவது நாளாக கோரிக்கைகள் அடங்கிய பட்டை அணிந்து பணியாற்றினா்.
Published on

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த மருத்துவா்களும் பேராசிரியா்களும் 16 -ஆவது நாளாக கோரிக்கைகள் அடங்கிய பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியாற்றினா்.

அரசாணை 354 -ஐ மறு ஆய்வு செய்து மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயா்வும் பதவி உயா்வும் வழங்க வேண்டும். அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு உடனடியாக ரூ.3000- படித்தொகை வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவா்களை நியமிக்க வேண்டும். முதுநிலை படிப்புக்கான ஊதிய உயா்வை வழங்குவதற்காக தனி அரசாணை வெளியிட வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி , அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஜன.12 முதல் 19 -ஆம் தேதி வரை கோரிக்கை பட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், கோரிக்கைகள் தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, ஜன.20 -ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த மருத்துவா்கள் தயாரானாா்கள். அப்போது, ஒருவார காலத்துக்குப் போராட்டத்தை ஒத்தி வைக்க அமைச்சா் தரப்பில் வலியுறுத்தப்பட்டதால் அதை ஏற்று போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நாச்சியப்பன் கூறியதாவது: எங்களது கோரிக்கைகள் தொடா்பாக அரசிடமிருந்து இதுவரை சாதகமான எந்த அறிவிப்பும் வரவில்லை என்பதால், திட்டமிட்டபடி வருகிற 28 -ஆம் தேதி சென்னையில் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் 16 -ஆவது நாளாக கோரிக்கைப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com