தமிழக எல்லைப் பகுதியில் கேரள கம்யூனிஸ்ட் கொடிக் கம்பம்: காவல் துறை அகற்றியதால் பரபரப்பு

கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியான கம்பம்மெட்டில், அத்துமீறி கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வைத்த கொடிக் கம்பத்தை தமிழக காவல் துறை உதவியுடன்

கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியான கம்பம்மெட்டில், அத்துமீறி கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வைத்த கொடிக் கம்பத்தை தமிழக காவல் துறை உதவியுடன், தமிழக வனத் துறை சனிக்கிழமை அகற்றியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையிலுள்ள கம்பம்மெட்டு மலைப் பகுதி, தேனி மாவட்டம் கம்பம் மேற்கு வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த பிப்ரவரி 22-இல், கேரள சுங்கவரித் துறையினர் சோதனைச் சாவடி கன்டெய்னர் ஒன்றை தமிழக எல்லைப் பகுதிக்குள் வைத்தனர். இதைத் தடுத்த தமிழக வனத் துறையினர் தாக்கப்பட்டனர். இதனால், தமிழக சோதனைச் சாவடி மூடப்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமை, தமிழக எல்லைக்குள்பட்ட பகுதியில் கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பத்தை சிலர் அத்துமீறி அமைத்தனர்.
இதைத் தடுத்த தமிழக வனத் துறையினரிடம், இந்த இடம் கேரளத்துக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்யவே கொடிக் கம்பம் அமைத்துள்ளதாக, கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.
இது குறித்து, தமிழக வனத் துறையினர் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் கொடி கம்பத்தை அகற்ற வலியுறுத்தி புகார் அளித்தனர். உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாமலை, வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில், தமிழக காவல் துறையினர், உத்தமபாளையம் வட்டாட்சியர் குமார், கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பின்னர், அத்துமீறி வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பத்தை அகற்றி, கம்பம் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
அப்போது, கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழக போலீஸாரையும், வனத் துறையினரையும் கண்டித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, எல்லைப் பகுதியில் இரு மாநில போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com