தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி 2 (ஏ) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு எழுதுவதற்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தொகுதி 2 (ஏ)-ல் அடங்கியுள்ள 1,953 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு மே 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
போட்டித் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தேனியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் போட்டித் தேர்வுக்கான பாடக் குறிப்புகள், முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் போட்டித் தேர்வுக்கான விண்ணப்பம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள், மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.