போடியில் காவல்துறை புகார் பெட்டி: மாவட்டத்தில் முதல் முறையாக அறிமுகம்

தேனி மாவட்டத்தில் முதல் முறையாக போடியில் காவல்துறை புகார் மற்றும் ஆலோசனை பெட்டி சனிக்கிழமை அமைக்கப்பட்டது.


தேனி மாவட்டத்தில் முதல் முறையாக போடியில் காவல்துறை புகார் மற்றும் ஆலோசனை பெட்டி சனிக்கிழமை அமைக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் குற்றங்களை குறைப்பதற்கும், தடுப்பதற்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக கிராமங்கள், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வார்டுகள் தோறும் ஒரு காவலரை நியமித்து, அக்காவலர் தலைமையில் கிராம மற்றும் வார்டு கண்காணிப்புக் குழுக்களை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் எந்த ஒரு புகார், தகவல் அல்லது ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில் காவல்துறை புகார் பெட்டி அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி மாவட்டத்திலேயே முதல் முறையாக போடியில் புகார் பெட்டி அமைக்கும் நிகழ்ச்சி மற்றும் காவல்துறை-பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி 33 ஆவது வார்டு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தலைமை வகித்து பேசியது:
காவல்துறை பொதுமக்களுடன் இணக்கமாக பழகும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதற்காக வார்டு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் எந்த ஒரு தகவலையும், குற்ற நடவடிக்கைகளையும், சந்தேகத்திற்கிடமான சம்பவங்களையும் காவல்துறை கவனத்திற்கு கொண்டு வரலாம். மேலும் காவல்துறையின் 100, 112 ஆகிய இலவச தொலைபேசி எண்கள், காவலன் செயலி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வசதியின் உதவியுடன் தகவல்களை தெரிவிக்கலாம் என்றார்.
இதில் பங்கேற்ற அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை மாணவர்களுக்கு சிலர் விற்பனை செய்து வருகின்றனர். அதை தடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
முன்னதாக போடி காவல் துணை கண்காணிப்பாளர் தி.ஈஸ்வரன் வரவேற்றார். போடி நகர் காவல் ஆய்வாளர் பா.சேகர் நன்றி கூறினார்.
பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் வினோத், போடி தாலுகா காவல் ஆய்வாளர்
வெங்கடாசலபதி, போடி நகர் சார்பு ஆய்வாளர்கள் அ.ராஜலிங்கம், விக்னேஷ் பிரபு, 33-வது வார்டு பொறுப்பு காவலர் முத்துச்செல்வம், வார்டு கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com