வருசநாடு அருகே 14 கிலோ கஞ்சா பறிமுதல்: வியாபாரி உள்பட 3 பேர் கைது

வருசநாடு அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரையும் மற்றும் வியாபாரியையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது

வருசநாடு அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரையும் மற்றும் வியாபாரியையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
       தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு பகுதியில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்தது. இந் நிலையில், வியாழக்கிழமை இரவு வருசநாடு பகுதியிலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக, கண்டமனூர் வனத் துறையினர் மற்றும் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், கண்டமனூர் வனத் துறையினர் கொம்புக்காரன்புலியூர் சோதனைச் சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
     அப்போது, இரவு 9 மணியளவில் வருசநாடு பகுதியிலிருந்து வந்துகொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ஆட்டோவில் வந்த இருவர் சிமென்ட் சாக்கு மூட்டையில் மறைத்து வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, 2 பேரையும் வனத் துறையினர் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
     போலீஸார் நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தி வந்த 2 பேரும் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் மூர்த்தி (23) மற்றும்  முருகன் மகன் சுரேஷ் (22) எனத் தெரியவந்தது. மேலும், அவர்கள் வருசநாடு பகுதியில் மொத்த வியாபாரியிடம் கஞ்சா வாங்கி வருவதாக தெரிவித்தனர்.
    அதையடுத்து, காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில், சார்பு-ஆய்வாளர் அழகுபாண்டி மற்றும் வருசநாடு போலீஸார், வருசநாடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சிங்கராஜபுரம் அருகே அல்லால் ஓடைப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.
     அப்போது, அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர், காந்தி கிராமத்தைச் சேர்ந்த உதயக்குமார் (47) எனத் தெரியவந்தது. மேலும், கஞ்சா மொத்த வியாபாரம் செய்து வரும் இவரிடம், எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸார்  மூன்று பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
தேனி:  தேனி அருகே கோடாங்கிபட்டியில் கஞ்சா வைத்திருந்ததாக இருவரை, போலீஸார் வியாழக்கிழமை இரவு  கைது செய்தனர்.
    கோடாங்கிபட்டி, கூட்டுறவுச் சங்கம் தெருவைச் சேர்ந்தவர் ஆங்கத்தேவர் (75). அதே பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி சாந்தி (37). இவர்கள் இருவரும் கூட்டுறவுச் சங்கம் தெருவில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக, பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் மொத்தம் 14 கிலோ எடையுள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com