தற்கொலை வழக்கில் ராயப்பன்பட்டி காவல் நிலையம் முதலிடம்!

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 6 மாதங்களில் 24 தற்கொலை வழக்குகள் பதிவு

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 6 மாதங்களில் 24 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. எனவே இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
  முற்றிலும் கிராமப்புறங்களை கொண்டுள்ள ராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சின்ன ஓவுலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, சுருளி அருவி பகுதிகள் உள்ளன. இங்குள்ள மக்களில் பெரும்பாலோனோர் விவசாயத்தையே நம்பி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பொழிவு இல்லாததால் அருகே கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு இப்பகுதி மக்கள் நாள்தோறும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் சிறு சிறு பிரச்னைகளுக்கு கூட தற்கொலை தான் தீர்வு என கருதுகின்றனர். இதனை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.      கடந்த வாரம் நடைபெற்ற தேனி மாவட்ட காவல் நிலைய குற்றத் தடுப்பு நடவடிக்கை பற்றிய ஆய்வு கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 24 தற்கொலை வழக்குகள் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது மட்டும் அல்லாமல் கொலை வழக்குகள், விபத்து மரணங்கள், போக்ஸோ சட்டத்தின் கீழ் அதிக அளவிலான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு மாவட்டத்திலேயே முதல் காவல் நிலையமாக உள்ளது. மேலும் சுருளி அருவி பூசாரி கொலை வழக்கும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. 
தற்கொலைக்கான காரணம் 
 கிராமப் பகுதி என்பதால் ஆண்களும், பெண்களும் உடனுக்குடன், உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை முடிவுகளை எடுக்கின்றனர். கந்து வட்டிக்கொடுமை, காதலுக்கு எதிர்ப்பு, வேலையின்மை, வறட்சி போன்ற நிகழ்வுகளால் தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இதுமட்டுமல்லாமல் ஒருசிலர் சிறு பிரச்னைகளுக்காக தற்கொலை செய்து கொள்வதும் போலீஸாரின் விசாரணையின் போது தெரியவருகிறது.
மனநல ஆலோசனை:
இது குறித்து வழக்குரைஞர் கே.மாரிச்செல்வம் கூறியது: சாலை விபத்துகளைத்  தவிர்க்க பல்வேறு விழிப்புணர்வு ஊர்வலங்கள், கருத்தரங்குகள் நடத்தும் காவல் துறையினர், கிராமப்புற பகுதி மக்களிடையே, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை தடுக்கவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனால் தற்கொலைகளின் எண்ணிக்கை நிச்சயமாக குறையும். மேலும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களின் உண்மை தன்மையையும் ஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதும், தற்கொலை எண்ணங்களை மக்களிடையே தவிர்க்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com