டிராக்டரில் கேரளத்துக்கு கடத்திச் சென்ற 35 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது

தேனி அருகே மாட்டுச் சாணம் ஏற்றிச் சென்ற டிராக்டரில் மறைத்து வைத்து கடத்திய 35 ரேஷன் அரிசி மூட்டைகளை

தேனி அருகே மாட்டுச் சாணம் ஏற்றிச் சென்ற டிராக்டரில் மறைத்து வைத்து கடத்திய 35 ரேஷன் அரிசி மூட்டைகளை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
உத்தமபாளையம் வட்டாரத்திலிருந்து தேவாரம், கோம்பை, கம்பம் , கூடலூர் போன்ற பகுதிகளிலிருந்து கேரளத்திற்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை அவ்வப்போது போலீஸார் சோதனை செய்து அரிசியை பறிமுதல் செய்தும், கடத்தல்காரர்களை கைது செய்தும் வருகின்றனர். இருப்பினும் ரேஷன் அரிசி கடத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு இயற்கை உரமான மாட்டுச் சாணங்களை லாரிகளில் ஏற்றிச்செல்வது வழக்கம். இதை ஏலக்காய் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
 இதேபோல் ஞாயிற்றுக்கிழமை தேவாரத்திலிருந்து கம்பம் மெட்டு சாலை வழியாக மாட்டுச் சாணத்தை எடுத்துச் சென்ற டிராக்டரில் ரேஷன் அரிசியை மறைத்து கடத்துவதாக  உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் கம்பம் மெட்டு சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரில் ரேஷன் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்து அதற்கு மேலாக மாட்டுச் சாணத்தை போட்டு மறைந்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதில் 35 மூட்டைகளிலிருந்த சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார் உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிபக் கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
 இது குறித்து, தேவாரத்தை சேர்ந்த கூத்தப்பெருமாள், புஷ்பகலாராணி, பழனிச்சாமி மற்றும் சுருளிராஜ் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து 
வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com