"ஜூன் 3-இல் மு.க.ஸ்டாலின் முதல்வராவார்'

ஜூன் 3-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவார் என்று திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜூன் 3-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவார் என்று திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
    தேனி அல்லிநகரத்தில் தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பெரியகுளம் சட்டப் பேரவை தொகுதி திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோருக்கு வாக்குச் சேகரித்து அவர் பேசியது: பிரதமர் நரேந்திரமோடி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே தமிழகத்தில் ஏப்.18, நரேந்திரமோடிக்கு கெட்-அவுட் சொல்லும் நாளாக இருக்க வேண்டும்.
   தமிழகத்தில் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில்  திமுக அமோக வெற்றி பெறும். மே 19-ஆம் தேதி மேலும் 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்து முடிந்த பின்பு, ஜூன் 3-ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராவார். ஜெயலலிதா சசிகலாவை விட ஓ.பன்னீர்செல்வம் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்ததால் தான் அவரை இரு முறை முதல்வராக்கினார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், தனக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதும் ஜெயலலிதா மரணம் குறித்து வாய் திறக்க மறுக்கிறார். ஆதிக்க சக்திகள் மற்றும் அடிமை முறை ஆட்சி ஒழிய காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
 காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மகாராஜன் ஆகியோரை ஆதரித்து ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே உதயநிதி ஸ்டாலின் பேசியது:
 தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாத அ.தி.மு.க அரசு பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும். திமுக வின் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது போல் போடி- மதுரை அகல ரயில் பாதை திட்டம், கம்பம், கூடலூர் வரை நீட்டிக்கப்படும். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 வைகை கூட்டுக் குடிநீர் திட்டம், டி.சுப்புலாபுரம் நெசவு பூங்கா, முல்லைப் பெரியாற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து கண்மாய் குளங்களில் நீராதாரத்தை பெருக்குவது உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com