குழப்பத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவிர, அந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினர் யாரும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லவில்லை.  இதனால் அந்தக் கூட்டணியே குழப்பத்தில்


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவிர, அந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினர் யாரும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லவில்லை.  இதனால் அந்தக் கூட்டணியே குழப்பத்தில் உள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
தேனியில் சனிக்கிழமை  பிரதமர் மோடி பங்கேற்ற  தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் மேலும் பேசியது:  நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன் வைத்து மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவிர, அந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினர் யாரும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. அந்தக் கூட்டணியே குழப்பத்தில் உள்ளது. அதில் ஒற்றுமை இல்லை. 
இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேர்ந்துள்ளனர். கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. கேரளத்தில் திமுக, கம்யூனிஸ்டை ஆதரிக்கிறதா? காங்கிரஸை ஆதரிக்கிறதா? அவர்கள் அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி.   அலைக்கற்றை ஊழலில் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் தலைக் குனிவை ஏற்படுத்தியது திமுக. ஊழலைப் பற்றி பேச திமுகவுக்குத் தகுதி இல்லை என்றார். 
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மோடி ஆட்சியில் நாட்டில் மதக் கலவரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறுபான்மையினரின் உண்மை நண்பனான அவர்,  தீவிரவாத தாக்குதல் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியவர். இந்தியாவிற்கு உலகளாவிய கம்பீரத்தை உருவாக்கியவர். எனவே தான் அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்கிறோம்.
பாஜக மற்றும் அதிமுக அரசு மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் என்பதை மக்கள் அறிந்துள்ளனர்.  
காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளான காவிரி, முல்லைப் பெரியாறு அணை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை.  மத்திய அரசை தட்டிக் கேட்கும் தெம்பு திமுகவிற்கு இல்லை. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, நம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கோதாவரி, கிருஷ்ணா நதிகளை காவிரியுடன் இணைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்துவார். கூடா நட்பு கூட்டணியை வேரோடு வீழ்த்துவோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com