தேனி மாவட்டத்தில் பலத்த மழை: சின்னசுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம்  வருசநாடு அருகே பலத்த மழை காரணமாக சின்னசுருளி அருவியில் வெள்ளிக்கிழமை

தேனி மாவட்டம்  வருசநாடு அருகே பலத்த மழை காரணமாக சின்னசுருளி அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
    வருசநாடு அருகே மேகமலை அருவி என்ற சின்னசுருளி அமைந்துள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காக தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவர். இந்நிலையில் கடந்த சில நாள்களாக, மேகமலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதன்கிழமை இரவு முதல் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் பாறை, கற்கள் தண்ணீரில் அடித்து வரப்பட்டன. இதனையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியில் நீர்வரத்து சீராகும் வரை வனத்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தமபாளையம்: ஹைவேவிஸ்-மேகமலை உள்ளிட்ட 7 மலைக் கிராமங்களில் கடந்த 3 தினங்களாக பலத்த  மழை பெய்து வருகிறது. இங்குள்ள மேகமலை, ஹைவேவிஸ், வெண்ணியார், இரவங்கலார் மற்றும் மகாராஜா மெட்டு ஆகிய 5 அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.     ஹைவேவிஸ்-மேகமலை பகுதியிலுள்ள மலைக் கிராமங்களில் 3 ஆயிரம் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக அனைத்து தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் தொழிற்சங்கம் மூலமாக விடுமுறை பெற்றுக் கொடுக்கப்பட்டது. 
மின்சாரம் துண்டிப்பு: ஹைவேவிஸ் பேரூராட்சி உள்பட 7 மலைக்கிராமங்களில் சுமார் 8 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாள்களாக பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழை காரணமாக மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் மலைக் கிராமங்கள் இருளில் மூழ்கின. இதையடுத்து மக்கள் மின்சாரமின்றி பெரிதும் அவதிப்பட்டனர்.
மரம் சாய்ந்து 
போக்குவரத்து துண்டிப்பு
ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு செல்லும் சின்னமனூர் - இரவங்கலார் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு தாக்குப் பிடிக்க  முடியாமல் மரங்கள் சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக ஹைவேவிஸ் பகுதிக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.
   இந்நிலையில் வியாழக்கிழமை சாலையில்  விழுந்து கிடந்த மரங்களை அகற்றிட  நவீன உபகரணங்கள் இல்லாமல் போலீஸார் மிகவும் திணறினர். பின்னர் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த  மரங்களை வெட்டி அகற்றினர். 
  இதனால் சின்னமனூர் - இரவங்கலார் நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடி:   போடி பிள்ளையார் அணையில் தண்ணீர் அருவிபோல் கொட்டுகிறது. இந்நிலையில் பிள்ளையார் அணையில் பிரதான வாய்க்கால் பகுதியில் மதகு அமைந்துள்ள பகுதியில் விரிசல் காணப்பட்டது.     இதனையடுத்து இந்த மதகின் வழியாக தண்ணீர் செல்வதை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி ஆய்வு செய்தார். மேலும் அவர் பிச்சங்கரை மலைக் கிராம பகுதியிலும், முந்தல் மலைக் கிராமத்தில் ஆற்றின் கரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியையும் ஆய்வு செய்தார். போடி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வரை 44.2 மி.மீ. மழை பதிவானது.      பிள்ளையார் அணை அருவி பகுதியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் இப்பகுதியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் போடி நகர் காவல் நிலைய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com