முல்லைப் பெரியாற்று நீரை ஆண்டிபட்டிக்கு கொண்டு செல்லும் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்று தண்ணீரை குழாய் மூலம் ஆண்டிபட்டி வட்டாரப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை

முல்லைப் பெரியாற்று தண்ணீரை குழாய் மூலம் ஆண்டிபட்டி வட்டாரப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த அரசை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை,  விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளித்தனர்.
முல்லைப் பெரியாற்று தண்ணீரை குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியில் இருந்து ஆண்டிபட்டி வட்டாரத்திற்கு குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த அரசை வலியுறுத்தி தமிழக மலர் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.சின்னச்சாமி தலைமையில், ஆண்டிபட்டி வட்டாரத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர். அவர்களை நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீஸார், நிர்வாகிகள் சிலரை மட்டும் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதித்தனர்.
ஆட்சியரிடம் விவசாயிகள் அளித்த மனு விபரம்: மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் ஆண்டிபட்டி வட்டாரத்தில் கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து விவசாயம் நலிடைந்து வருகிறது. ஆண்டிபட்டி, க.மயிலை ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் மற்றும் கால்நடைகளின் தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  
ஆண்டிபட்டி வட்டாரத்தில் நிலவும் வறட்சியை போக்குவதற்கு, குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து முல்லைப் பெரியாற்று தண்ணீரை ஆண்டிபட்டி வட்டாரப் பகுதிக்கு கொண்டு வந்து கண்மாய்களில் நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு  ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 
இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com