அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கு இடையூறு: மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் புகார்

போடி அருகே போ. அம்மாபட்டியில் அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனையிடத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின்

போடி அருகே போ. அம்மாபட்டியில் அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனையிடத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் வீடு கட்டுவதற்கு சிலர் இடையூறு செய்து, தங்களது இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக மன வளர்ச்சி குன்றிய 3 மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் செவ்வாய்கிழமை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறையிட்டனர்.
 போடி அருகே சில்லமரத்துப்பட்டி, பத்திரகாளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் சுருளிச்சாமி (48). இவரது மனைவி மகேஸ்வரி (42). இவர்களுக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. மூவரும் மனவளர்ச்சி மற்றும் உடல் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகள். மகேஸ்வரிக்கு போடி அருகே போ.அம்மாபட்டியில் அரசு சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2014-ஆம் ஆண்டு வீட்டுமனையிடம் வழங்கப்பட்டது.
இந்த இடத்தில், தற்போது போடி ஊராட்சி ஒன்றியம் மூலம் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் மானியம் உதவி பெற்று சுருளிச்சாமி, மகேஸ்வரி தம்பதி வீடு கட்டி வருகின்றனர். இந்த நிலையில், சுருளிச்சாமி தம்பதியினர் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் வீட்டில் குடியேறுவதை விரும்பாத அப் பகுதியைச் சேர்ந்த சிலர், அவர் வீடு கட்டுவதற்கு இடையூறு செய்து வருவதாகவும்,  இது குறித்து போடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
காவல் துறை அலைக்கழிப்பு: இந்த நிலையில், தனது மனைவி மற்றும் மாற்றுத் திறானாளி குழந்தைளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்த சுருளிச்சாமி, அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கு சிலர் இடையூறு செய்து தங்களது இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும், தங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரனை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க வேண்டும் என்றும் அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் முறையிட்டார். ஆனால், பகல் 12.30 மணிக்குள் மட்டுமே மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க முடியும் என்றும், போடி காவல் நிலையத்திற்குச் சென்று காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்குமாறும் கூறி அவர்களை காவலர்கள் திருப்பி அனுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com