கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க ஆலோசனைக் கூட்டம்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக சாகுபடிக்கு பாசன கால்வாய்களில் தண்ணீர் திறப்பது

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக சாகுபடிக்கு பாசன கால்வாய்களில் தண்ணீர் திறப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்  உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. 
கம்பம் பள்ளத்தாக்கு உள்பட மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் துவங்கி இருக்க வேண்டிய முதல் போக நெற்பயிர் சாகுபடி பருவமழை தவறியதால் நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களாக  முல்லைப் பெரியாறு அணையின்  நீர்பிடிப்பு பகுதியில்  தொடர்ச்சியாக மழை பெய்து நீர் வரத்து ஏற்பட்டது. 
 பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்ட நிலையில் கடந்த 6 மாதமாக 112 அடியாக இருந்த நீர்மட்டம்  தற்போது ஒரே வாரத்தில் 130 கன அடியாக உயர்ந்தது. 
  100 கன அடி நீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்ட நிலையில் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்ந்து செவ்வாய்க்கிழமை 1700 கன அடி நீர் சுரங்கப்பாதை வழியாக தமிழகப்பகுதிக்கு திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக உத்தமபாளையத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வம் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கத் தலைவர் தர்வேஷ்முகைதீன் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அதில், கம்பம் பள்ளத்தாக்கு உள்பட மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிச்செட்டிபட்டி வரையில் 14,707 ஏக்கர் பரப்பளவு முதல்போக சாகுபடிக்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து  17 பாசன கால்வாய்களுக்கு  தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 
இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி அன்புச்செல்வம், விவசாயிகளிடம் தெரிவித்தார்.  இக்கூட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கு கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர், சீலையம்பட்டி, கோட்டூர், குச்சனூர், மார்க்கையன்கோட்டை பகுதியை சேர்ந்த  விவசாய சங்க நிர்வாகிகள்   கலந்து கொண்டனர்.
கம்பம், கூடலூர் பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பை எதிர்பார்த்து, வயல்வெளிகளில் நாற்று நடவு செய்யும் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com