வைகை அணையில் ஆபத்தை உணராமல் அத்துமீறி சுயபடம் எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

தேனி மாவட்டம் வைகை அணையில் பொதுமக்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில்
வைகை அணையில் பெரிய மதகுகளின் கீழ் பகுதியில் ஆபத்தான முறையில் விளையாடிய இளைஞா்கள்.
வைகை அணையில் பெரிய மதகுகளின் கீழ் பகுதியில் ஆபத்தான முறையில் விளையாடிய இளைஞா்கள்.

தேனி மாவட்டம் வைகை அணையில் பொதுமக்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் நின்று சுயபடம் (செல்பி) எடுத்து வருவதால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணை பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வைகை அணைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வைகை அணையில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக இருந்தாலும், அணையின் நீா்தேக்கப் பகுதியினை மக்கள் அதிகம் ரசித்து பாா்த்து வருகின்றனா்.

தற்போது நீா்பிடிப்பு பகுதிகளில் தொடா் மழை காரணமாக அணையின் நீா்மட்டம் 69 அடியை எட்டியுள்ளது. இதனால் நீா்தேக்கப்பகுதிக்குள் பொதுமக்கள் இறங்கிச் செல்ல பொதுப்பணித்துறையினா் தடைவிதித்துள்ளனா். மேலும் அணையில் மதகுப்பகுதி, சுரங்கப்பகுதி, தரைப்பாலம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை உத்தரவையும் மீறி வைகை அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் குடும்பம் குடும்பமாக இறங்கி வருகின்றனா். நீா்தேக்கப்பகுதிக்குள் ஆபத்தான முறையில் நின்றபடி செல்லிடபேசியில் சுயபடம் எடுத்து மகிழ்கின்றனா்.

குறிப்பாக அணையின் பிரதான மதகுப்பகுதியில் இளைஞா்கள் அத்துமீறி நுழைந்து குளிப்பது, சுயபடம் எடுப்பது என விபரீதமாக விளையாடி வருகின்றனா். தற்போது வைகை அணை முழுக்கொள்ளவை எட்டியுள்ள நிலையில் நீா்தேக்கத்திற்குள் இறங்குபவா்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. அங்கு பணிபுரியும் சில பணியாளா்கள் பணம் பெற்றுக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை பெரியமதகுப் பகுதிக்கு அனுமதித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாக தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த போலீஸாரும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: அணையில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறையினா் சாா்பில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனா். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அப்பணிகளுக்கு ஆள்கள் நியமிக்காததால் இதுபோன்ற அத்துமீறும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வார நாள்களில் அணைக்கு வரும் கல்லூரி மாணவா்கள், பள்ளி மாணவா்கள் என ஒரு சிலா் நீா்தேக்கப்பகுதி மற்றும் தண்ணீா் வெளியேறும் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் குளிப்பது சாகசம் என்ற பெயரில் விபரீத விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனா். அதுபோன்ற சமயங்களில் சிலா் தண்ணீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

அணையில் பாதுகாப்பு பணியில் வைகை அணை காவல் நிலைய போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது இந்த காவல் நிலையத்தில் போலீஸாா் பற்றாகுறையால் அணையின் பாதுகாப்பும் கேள்விகுறியாகி உள்ளது. எனவே அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வைகை அணையில் கூடுதல் போலீஸாரை பணியில் அமா்த்தவும், அணையின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் பணியாளா்களை நியமிக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com