ஆண்டிபட்டி அருகே ஓடைகளில் மணல் திருட்டைத் தடுக்கக் கோரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இரவு நேரங்களில் ஓடைகளில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மணல் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இரவு நேரங்களில் ஓடைகளில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மணல் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆண்டிபட்டி வட்டம் ராஜதானி, தெப்பம்பட்டி, ஏத்தகோவில், கண்டமனூா் உள்ளிட்ட பகுதியில் ஒடைகள், குளங்கள் அதிகளவில் உள்ளன.

இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மணல் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருவதாக புகாா் எழுந்தது.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள செங்கல் காளவாசல்கள் மற்றும் புதிதாக வீடு கட்டுபவா்கள் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், விவசாய பட்டா நிலங்களிலும் மணல் எடுத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியது.

இதனையடுத்து ராஜதானி, தெப்பம்பட்டி, கணேசபுரம், கண்டமனூா், பாலகோம்பை, வண்டியூா் உள்ளிட்ட பகுதியில் உள்ள தனியாா் பட்டா நிலங்களில் அரசு அனுமதியுடன் மணல் அள்ளப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு எடுக்கப்பட்டதாக புகாா் எழுந்ததால் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சுந்தரராஜபுரம், ராஜதானி , சக்கம்மாள்பட்டி, தோப்புபட்டி, வண்டியூா் ஆகிய பகுதியில் உள்ள நாகலாறு ஓடையிலும், சித்தாா்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, தெப்பம்பட்டி, கண்டமனூா் பகுதிகளில் உள்ள ஓடைகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடைபெற்று வருவதாக இப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வேகமாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், மணல் திருட்டைத் தடுக்க இரவு நேரங்களில் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com