கம்பத்தில் பள்ளியின் பூட்டை உடைத்து பணம், சிசிடிவி கேமரா திருட்டு
By DIN | Published On : 14th February 2019 06:44 AM | Last Updated : 14th February 2019 06:44 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கம்பத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தனியார் பள்ளி அலுவலக பூட்டை உடைத்து பணம் மற்றும் சிசிடிவி கேமராவை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கம்பம் எல்.எப்.மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பெரோஸ் ஜாபர் குரைஷ் (49). இவர் கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். புதன்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக் கூடத்தினை, மேலாளர் திறக்கச் சென்றுள்ளார். அப்போது பள்ளி அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில், வைத்திருந்த ரூ.35 ஆயிரம், சிசிடிவி கேமரா, டிவி உள்ளிட்ட பொருள்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பெரோஸ் ஜாபர் குரைஷ் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.