தேக்கடியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டு யானை மீட்பு
By DIN | Published On : 14th February 2019 06:47 AM | Last Updated : 14th February 2019 06:47 AM | அ+அ அ- |

தேக்கடியில் கேரள சுற்றுலாத்துறைக்கு சொந்தமான விடுதியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டு யானையை பல மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் வனத்துறையினர் மீட்டனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடி படகு துறை அருகே கேரள மாநில சுற்றுலாத் துறைக்கு சொந்தமான பெரியார் ஹவுஸ் என்ற நட்சத்திர விடுதி உள்ளது. இந்த விடுதியின் கழிவுநீர் தொட்டி வெளிப்பகுதியில் உள்ளது. புதன்கிழமை அதிகாலை தேக்கடி வனப்பகுதியில் இருந்து வந்த நான்கு யானைகள் அப்பகுதி வழியே சென்றன.
அதில், 12 வயதுள்ள பெண் யானை ஒன்று கழிவுநீர் தொட்டியின் மேல் நடந்து சென்றது. அப்போது, தொட்டியின் சிமென்ட் சிலாப் மூடி உடைந்ததால், கழிவுநீர் தொட்டிக்குள் யானை தவறி விழுந்தது. சுமார் 10 அடி ஆழமுள்ள தொட்டியில் விழுந்த யானை, பல்வேறு முயற்சிகள் செய்தும் வெளியே வர முடியவில்லை.
தொட்டிக்குள் விழுந்த யானையைச்சுற்றி மற்ற மூன்று யானைகள் பிளிறியபடி இருந்தன. இதனால் தேக்கடி வனத்துறையினரால் மீட்பு பணிகளை செய்ய முடியவில்லை. பின்னர் தேக்கடி வனச்சரகர் அனுராஜ் தலைமையில் வந்த வனத்துறையினர் மற்ற யானைகளை விரட்டியபின், ஜேசிபி இயந்திரம் மூலம் தொட்டியின் பக்கவாட்டை உடைத்து பாதை அமைத்து யானையை மீட்டனர். தாட்டியில் விழுந்த யானை காயத்துடன் உள்ளதால் யானையை கண்காணிக்க வனத்துறையினர் தனிக்குழு அமைத்துள்ளனர்.