ரூ.2.55 கோடியில் கம்பம்மெட்டு மலைச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தேனி மாவட்டம், கம்பம் -கம்பம்மெட்டு மலைச்சாலை, ரூ. 2 .55 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டம், கம்பம் -கம்பம்மெட்டு மலைச்சாலை, ரூ. 2 .55 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்வதற்கு போடிமெட்டு சாலை, கம்பம்மெட்டு சாலை, குமுளி மலைச்சாலை ஆகிய 3 மலைச்சாலைகள் அமைந்துள்ளன. கம்பத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் கேரளாவை இணைக்கும் கம்பம்மெட்டு சாலை கம்பம் மேற்கு வனச்சரகத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாகச் செல்கிறது. 
இச்சாலையில் அடிவாரப்பகுதியில் இருந்து 6 முதல் 9 ஆவது கி.மீ. வரையுள்ள சாலை மிகவும் சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாகக் காணப்பட்டது. 
இதை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 2 .55 கோடியில் தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் பணிகளைத் தொடக்கி வைத்தார். நிகழ்வில்  நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முருகேசன், உதவிக் கோட்டப் பொறியாளர் கிருஷ்ணன், இளநிலை செயற்பொறியாளர் உதயகுமார் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பெ.காந்தி, அப்துல் ஆசிக், பொன்.கணேசன், உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.
பணிகள் தொடங்குவதை முன்னிட்டு இச்சாலையில் வெள்ளிக்கிழமை முதல் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பேருந்துகள், கன ரக வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக வாகனங்கள் குமுளி சாலை வழியாகச் செல்லலாம். மேலும் கம்பம்மெட்டு வழியாக கேரளாவுக்கு காலை 8 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு மேலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு தடையில்லை என்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com