கம்பம்மெட்டு சாலையில் ஜீப் கவிழ்ந்து: 14 பெண்கள் காயம்
By DIN | Published On : 09th June 2019 02:49 AM | Last Updated : 09th June 2019 02:49 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கம்பம்மெட்டு சாலையில் ஏலக்காய் தோட்டத்துக்கு கூலித் வேலைக்குச் சென்ற 14 பெண்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் வனச்சரகர் அலுவலக தெரு மற்றும் சுருளிப்பட்டி சாலையைச் சேர்ந்த 14 பெண்கள் கேரள மாநிலம் நெடுங்கண்டம் அருகே உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு சனிக்கிழமை ஜீப்பில் வேலைக்குச் சென்று இருந்தனர். மாலையில் திரும்பி வரும் வழியில் கம்பம்மெட்டு சாலையில் உள்ள மசூதி அருகே சாலையின் குறுக்கே கன்றுக் குட்டி வந்ததால் நிலை தடுமாறிய ஜீப் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் காயமைடந்த பெண்கள் 14 பேர் மற்றும் ஜீப் ஓட்டுநர் ரஞ்சித் ஆகியோர் மீட்கப்பட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பலத்த காயமடைந்த மாரியம்மாள்(40), இந்திராணி(55), ராஜேஸ்வரி((48) ஆகியோர் தேனி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் கன்றுகுட்டி ஜீப் மோதியதில் இறந்தது. விபத்து குறித்து கம்பம் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக ஜீப், கம்பம் நோக்கி வரும் போது, மலை அடிவாரத்தில் அதிவேகம் மற்றும் கூடுதலாக ஆள்களை ஏற்றி வந்ததாக போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். அதன்பிறகு விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.