ஆண்டிபட்டி அருகே குடிநீருக்காக பல கி.மீ. தொலைவு பயணிக்கும் மலைக் கிராம மக்கள்

ஆண்டிபட்டி அருகே மலை கிராமத்தில் கடந்த ஓராண்டாக குடிநீருக்காக  பொதுமக்கள் பல கி.மீ. தூரம் வாகனங்களில் சென்று வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே மலை கிராமத்தில் கடந்த ஓராண்டாக குடிநீருக்காக  பொதுமக்கள் பல கி.மீ. தூரம் வாகனங்களில் சென்று வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா புள்ளிமான்கோம்பை ஊராட்சியில் கொட்டோடைபட்டி மலைக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் மதுரை, தேனி மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வைகை ஆற்றிலிருந்து எடுக்கப்படும் குடிநீர், இக்கிராமத்தில் உள்ள தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியில் சேமிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. 
இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக இக்கிராமத்தில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் இங்குள்ள பொதுமக்கள் தங்களது குடிநீர் தேவைக்காக பல மைல் தூரம் நடந்து சென்று, விவசாய தோட்டங்களில் உள்ள கிணற்றில் இருந்து உப்பு நீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். 
உப்பு நீரை பயன்படுத்துவதால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்  கடந்த ஓராண்டாக குடிநீரின்றி  மிகவும் அவதியடைந்து  வருவதாக இப்பகுதி மக்கள்  புகார் தெரிவிக்கின்றனர். 
எனவே சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் மீண்டும் இக்கிராமத்திற்கு குடிநீர் விநியோகிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது:  எங்கள் கிராமத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது. இக்கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் வைத்திருக்கும் ஒரு சிலர்  3 கி.மீ. தொலைவில் உள்ள ராஜப்பன்கோட்டை கிராமத்திற்கும், 8 கி.மீ. தொலைவில் உள்ள தர்மத்துபட்டி கிராமத்திற்கும் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். 
மேலும் சிலர் தள்ளுவண்டிகளில் சென்று குடிநீர் சேகரித்து வருகின்றனர்.  இதில் வாகனங்கள் இல்லாதவர்கள் வேறு வழியின்றி அருகிலுள்ள விவசாயக் கிணறுகளில் உள்ள தண்ணீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com