கம்பத்தில் கேரள போலீஸார் ரோந்தை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தமிழக - கேரள எல்லைப் பகுதியான கம்பம்மெட்டு, கம்பம் பகுதியில் கேரள காவல் துறையினர் கடந்து

தமிழக - கேரள எல்லைப் பகுதியான கம்பம்மெட்டு, கம்பம் பகுதியில் கேரள காவல் துறையினர் கடந்து இரண்டு நாள்களாக ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 இதனை தடுக்க தேனி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பம்மெட்டு பகுதி சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதியில் கடந்த 6 ஆம் தேதி ஆட்டோவில் சென்ற கேரள வியாபாரியைத் தாக்கி செல்லிடப்பேசி மற்றும் ரூ. 8 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இது குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 
இந்நிலையில் இதுதொடர்பாக கேரள மாநில மின்சாரத் துறை அமைச்சர் எம்.எம்.மணி, கேரள முதல்வரை அண்மையில் சந்தித்து, தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் கேரள மக்களுக்கு பாதுகாப்பு குறைபாடு மற்றும் வழிப்பறி நடப்பதாக புகார் தெரிவித்தார். அதன்பேரில், கேரள முதல்வர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து கம்பம், கம்பமெட்டு சாலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஆயுதம் ஏந்திய கேரள போலீஸார் வாகனத்தில் ரோந்து சுற்றி வந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கம்பம் வடக்கு போலீஸாரிடம் கேட்டபோது, கேரள காவல் துறையினர் தமிழக எல்லைப் பகுதிக்குள் ரோந்து செல்ல அனுமதி இல்லை. பொருள்கள் வாங்க மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக வரலாம், அதற்கு தடை இல்லை என்றனர்.
கேரள போலீஸார் கம்பம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தது குறித்து தேனி மாவட்ட காவல் துறையினர், இடுக்கி மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கேரள வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வருவதாகவும், விரைவில் அவர்களை கைது செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com