பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு: தேனி மாவட்டத்தில் 2-ஆம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் சரிந்து வருவதால் தேனி மாவட்டத்தில் 2-ஆம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் சரிந்து வருவதால் தேனி மாவட்டத்தில் 2-ஆம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலம் தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் நிலங்களில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி தேனி மாவட்டத்தின் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போக நெல் அறுவடை முடிவடைந்தது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 2018-ஆம் ஆண்டு  அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-ஆம் போக நெல் சாகுபடியை விவசாயிகள் தொடங்கினர். சின்னமனூர், சீலையம்பட்டி, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதம்  2-ஆம் போக நெல் சாகுபடி தொடங்கியது.
இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணை நீர்மட்டம் வியாழக்கிழமை 114.20 அடியாக இருந்தது.  தற்போது அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர் தேவைக்காக மட்டும் விநாடிக்கு 147 கன அடி மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 2-ஆம் போக  சாகுபடி முன்கூட்டியே தொடங்கியதால் நெல் பயிர்கள் தற்போது அறுவடைப் பருவத்தில் உள்ளன. இப்பகுதியில் ஓரிரு வாரங்களில் நெல் அறுவடை தொடங்கும் நிலையில் உள்ளது. 
ஆனால், சின்னமனூர், சீலையம்பட்டி, கூழையனூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் 2-ஆம் போக நெல் சாகுபடி காலதாமதமாக தொடங்கியதால், இப்பகுதிகளுக்கு மேலும் 60 நாள்கள் வரை தண்ணீர் தேவை உள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், இப்பகுதியில் அறுவடைக்கு முன்னதாக நெல் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
அதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசன வாய்க்கால்களை அடைத்து தண்ணீர் வீணாவதை தடுக்கவும், ஆற்றுப்படுகையில் உறைகிணறு அமைத்து பண்ணை விவசாயம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு தண்ணீர் உறிஞ்சுவதைத் தடுக்கவும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com